தமிழ்நாட்டின் கடைக்கோடியில் உள்ள ஒரு குக்கிராமத்தில் பிறந்து, எவ்வித பின்புலமும் இல்லாமல், வறுமையில் உழன்று, மிகக் கஷ்டமான சூழ்நிலையில் படித்துப் பட்டம் பெற்று, நேரடி உதவி ஆய்வாளராகத் தேர்வு செய்யப்பட்டு, காவல் கண்காணிப்பாளர் என்ற நிலைக்கு உயர்ந்தவன் நான்.
காவல்துறை மற்றும் சட்டம் குறித்து, இதுவரையில் 13 புத்தகங்களை எழுதியவன். காவல்துறையில் 35 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட எனது பணிக்காலத்தில் சிறப்பான முறையில் பணிபுரிந்து, பெரும்பாலான மேலமை அதிகாரிகள் உட்பட, அனைவரின் அன்புக்கும், பாராட்டுகளுக்கும் உரியவன் ஆனேன். இப்போதும், காவல்துறையின் பெருமையை நிலைநாட்டுவதற்காக, காவல் துறையைப் பற்றி பொது ஊடகங்களில் யாராவது பொதுப்படையாக அவதூறு பரப்பினால், அசிங்கப்படுத்தினால், அதை எதிர்த்து உரத்த குரலில் சட்டம் சார்ந்த ஆதாரங்களோடு, விவாத மேடைகளில் எனது பங்களிப்பை ஆற்றி, காவல் துறைக்கு பெருமை சேர்த்து வருகின்றேன்.
ஆனால், நானே பல அவமானங்களை, அவமதிப்புக்களை, அலட்சியங்களை எனது பணிக்காலத்தில் சந்தித்துள்ளேன். அந்த அனுபவங்களையும், நான் சந்தித்த பல்வேறு நிலையில் உள்ள காவல் அலுவலர்கள், அவர்களது வித்தியாசமான – அதே சமயம் விசித்திரமான குணாதிசயங்கள் பற்றியும் நான் இப்புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறேன்.
என்னை சிறுமைப் படுத்தியவர்களை பழிவாங்க வேண்டுமென்ற சிறுபுத்தி காரணமாக நான் இதை எழுதவில்லை. ஆனால், சிவில் சர்வீஸஸ் தேர்வு எழுதி நேரடி ஐபிஎஸ் அதிகாரிகளாக தேர்வு செய்யப்பட்டவர்களில் ஒரு சிலர், கீழமை அதிகாரிகளை எப்படி அலட்சியப்படுத்துகிறார்கள், அவமானப் படுத்துகிறார்கள், தங்களைத் தாங்களே உயர்வாக நினைத்துக் கொண்டு
மற்றவர்களை முட்டாள்களாக நினைக்கிறார்கள் என்பதையெல்லாம் – யாரும் சொல்லி அல்ல - எனது சொந்த அனுபவங்கள் மூலமாக,அனுபவித்த சொல்லமுடியாத துன்பங்களை, அச்சமயங்களில் எனக்கு ஏற்பட்ட மனக்குமுறல்களை, மற்றவர்களும் அறிந்துக் கொள்ள வேண்டும், அப்படிப்பட்ட மனோபாவம் கொண்ட அதிகாரிகள், தங்கள் தவறுகளை உணர்ந்து திருத்திக் கொள்ள வேண்டும் என்ற ஒரு பேராசை காரணமாகவே, இந்த அனுபவங்களை நான் பதிவு செய்துள்ளேன்.
மற்றபடி யாரையும் சிறுமைப்படுத்த வேண்டும் அல்லது அவர்களுக்கு எதிராக அவதூறு பரப்ப வேண்டும் என்ற நோக்கத்திற்காக, இத்தொடர் எழுதப்படவில்லை. யார் மனதையும் புண்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கு துளியும் இல்லை. இது உண்மையாக நடந்த சம்பவங்கள் தொடர்பான, எனது மனதின் குரல்! மேலும், சமூகத்தின் பார்வையில் சமநோக்கு உள்ளவர்களாக, திறமைசாலிகளாக, நேர்மையாளர்களாக, கடும் உழைப்பாளிகளாக
அறியப்படும் அதிகாரிகள், இன்னொரு பக்கத்தில் எப்படி ‘தான்‘ என்ற ஆணவத்தோடு நடந்து கொள்கிறார்கள்? மற்றவர்களை காயப்படுத்தும் ‘சேடிஸ்ட்‘ மனப்பான்மையோடு செயல்படுகிறர்கள்?
அதே அதிகாரிகள், சில காலம் சென்ற பிறகு ஒன்றுமே நடவாதது போல, முன்பு காலில் போட்டு மிதித்தவர்களை, எப்படி மதித்து நடந்து கொள்கிறார்கள்? ஏன் இந்த முரண்பாடுகள்? என்பதை மற்றவர்களும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதே என் அவா. அது மட்டுமல்ல. இந்த அனுபவங்கள், எனக்கு மட்டும் ஏற்பட்டவை அல்ல. இன்னும் எவ்வளவோ பேர், என்னையும் விட கடுமையான அவமானங்களை சந்தித்துள்ளார்கள். ஆனால், அவர்கள் பல காரணங்களால் வாய்மூடி மவுனமாக இருந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் பிரதிநிதியாகவும், இதை நான் பதிவு செய்கிறேன்.
அதே சமயத்தில், காவல் துறையில் மனித வடிவத்தில் இருக்கும் தெய்வங்களும் உள்ளார்கள் என்பதையும் பதிவு செய்ய, நான் தவறவில்லை.
மொத்தத்தில், தொடர்களாக வரவிருக்கும் இந்த நூல் சில மனிதர்களின் முகமூடிக்குள் இருக்கின்ற இன்னொரு முகத்தை வெளிக்காட்டும். சில மாமனிதர்களை, மனிதநேயமிக்கவர்களை, இந்த நல்லுலகத்திற்கு அறிமுகப்படுத்தும்.
விரைவில் உங்கள் பார்வைக்கு -
சில நேரங்களில் சில மாமனிதர்கள்!?
வீ. சித்தண்ணன்